X Close
X
+91-9846067672

புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய இடங்களில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 220 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் சின்ன அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற சின்னப்பாண்டி (வயது 40), அவரது மகன் மணிகண்டன் (23), அந்தோணி (55) ஆகியோர் நேற்றிரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 3 பேரையும் சிறைப்பிடித்தனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஜெகதாப்பட் டினம் மீன்பிடி தளத்தில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர் இதில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் சென்ற மாரியப்பன், அவரது மகன் சக்திபாலன், சிவலிங்கம், ராஜகுரு மற்றும் கிருஷ்ணமூர்த்தி விசைப் படகில் சென்ற கிருஷ்ண மூர்த்தி, தனபால், மாரியப்பன், முத்துக்குமார் ஆகிய 8 பேரும் நேற்றிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்ததுடன், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட 11 பேரையும் 3 விசைப் படகுகளுடன் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று யாழ்ப்பாணம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்துகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மீனவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.தற்போது 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அவர்களது குடும்பத்தினர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் தனுஷ் கோடி அருகே இலங்கை மீனவர்கள் 3 பேரை நேற்று இந்திய கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.