X Close
X
+91-9846067672

நிலவுக்கு அனுப்பிய விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை - நாசா


நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த ஜூலை 22-ந்தேதி விண்ணில் ஏவியது.அதில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி அதிகாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் சமயத்தில் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்தனர்.

மேலும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள சமிக்ஞைகளை அனுப்பியது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.இதனால் நிலவின் தரையில் விக்ரம் லேண்டர் மோதி நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 14 நாட்கள் மட்டுமே ஆயுட் காலம் கொண்ட விக்ரம் லேண்டர் நிலவின் எந்த பகுதியில் வேகமாக தரையிறங்கி இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

இதையடுத்து நிலவை சுற்றும் ஆர்பிட்டர் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதேபோல் நாசாவின் ஆர்பிட்டர் மூலமும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் இதில் விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்த நிலையில் நாசாவின் ஆர்பிட்டர் நிலவின் தென் துருவ பகுதிக்கு சமீபத்தில் சென்று புகைப்படங்களை எடுத்தது. இதில் விக்ரம் லேண்டர் விழுந்ததாக கருதப்படும் இடங்களை புகைப்படம் எடுத்து நாசாவுக்கு அனுப்பியது.

புகைப்படங்களில் விக்ரம் லேண்டர் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை என்றும் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்களை கேமரா குழு கவனமாக ஆய்வு செய்தது. ஆனாலும் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 17-ந் தேதி ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.