X Close
X
+91-9846067672

அரசு ஊழியர்கள் 12-ந்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு



தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ம.சுப்பிரமணியன் மே 31-ந்தேதி ஓய்வுபெற இருந்த நிலையில் இந்த அரசு பணி ஓய்வுபெற விடாமல் தடுத்துள்ளது. மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அவரை அச்சுறுத்துதல் மூலம் அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.அரசு ஊழியர்கள் அரசுடன் சுமூகமான உறவுடன் செயல்பட நினைத்தாலும் அது தேவையில்லை என்று கருதி வெறுப்பு மனப்பான்மையில் அரசு செயல்படுகிறது.

இந்த பழிவாங்கும் அரசியலை ஒரு முடிவுக்கு கெண்டு வந்து அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு இணக்கமான உறவை முதல்-அமைச்சர் ஏற்படுத்த வேண்டும். அரசின் செயல்பாடுகள் எங்களை மீண்டும் போராட்டத்துக்கு நிர்பந்தித்து உள்ளது. இந்த பிரச்சனையில் முதல்- அமைச்சர் உடனடியாக தலையிடாத பட்சத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதை தவிர வேறு வழியில்லை.

முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அரசின் அடக்கு முறைகளை கண்டிக்கும் விதமாகவும், சுப்பிரமணியனின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவர் பணி ஓய்வுபெற அனுமதிக்கப்படும் வரை இந்த தொடர் போராட்டங்கள் தொடரும்.12-ந்தேதி முதல் சென்னையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்கும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எனவும், அரசின் கண்டு கொள்ளாத போக்கு தொடருமேயானால் 16-ந்தேதி மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட தீவிர போராட்டத்தினை உறுதி செய்து அறிவிப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.