X Close
X
+91-9846067672

விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளையுடன் முடிவு...!


சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் கருவியை நிலவின் மேற்பரப்பில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 7-ந்தேதி நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் திடீரென அதிக வேகம் ஏற்பட்டதால் லேண்டர் கருவி சற்று திசை மாறி சென்று விட்டது.இதனால் தகவல் தொடர்பை லேண்டர் கருவி இழந்தது. இந்த நிலையில் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் தரை இறக்க திட்டமிடப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் விழுந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். அமெரிக்காவின் விண்கலம் ஒன்று தற்போது நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது.

அந்த விண்கலம் மூலம் முயற்சி நடந்தது. ஆனால் நாசா முயற்சிக்கும் வெற்றி கிடைக்கவில்லை.நிலவின் தென் துருவ பகுதியை முதன் முதலாக இந்தியாதான் நெருங்கி சென்றுள்ளது. நிலவில் கடந்த 7-ந்தேதி முதல் நாளை (வெள்ளிக்கிழமை) வரை 14 நாட்கள் பகல் பொழுது நாட்களாகும். எனவே இந்த 14 நாட்களும் பகல் நேரத்தில் லேண்டர் கருவி மூலம் ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

நிலவின் தென்துருவ பகுதியில் இரவில் கடும் குளிர் நிலவும் என்பதால் இரவு நேரம் இருக்கும் 14 நாட்களும் ஆய்வு செய்ய இயலாது. இதை கருத்தில் கொண்டுதான் 7-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 14 நாட்கள் பகலில் ஆய்வு நடத்த லேண்டரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.அதன்படி லேண்டரின் 14 நாட்கள் ஆயுட்காலம் நாளையுடன் முடிகிறது. எனவே நாளைக்குள் தொடர்பு கிடைத்தால் சிறிது ஆராய்ச்சியை செய்ய முடியும்.

ஆனால்இதுவரை லேண்டருக்கும் பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்துக்கும் எந்த தொடர்பையும் ஏற்படுத்த இயலவில்லை. எனவே லேண்டரை இனி பயன்படுத்த முடியுமா? என்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்.சனிக்கிழமை முதல் நிலவின் தென்துருவ பகுதியில் தொடங்கும் இரவு நேரத்தில் மைனஸ் 240 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தாங்க முடியாதபடி மிக மிக கடுமையான குளிர் உருவாகும். அந்த கடும் குளிரில் லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள எலட்ரானிக் கருவிகள் அனைத்தும் பழுதடைந்து விடும்.

எனவே இனி லேண்டரை பயன்படுத்த இயலுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. நிலவில் அடுத்த பகல் பொழுது தொடங்கும் போது கூட லேண்டரை தட்டி எழுப்ப இயலாது. இதை கருத்தில் கொண்டு லேண்டர் கருவியில் கடைசி நிமிடத்தில் ஏன் கோளாறு ஏற்பட்டது என்பது பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் நிபுணர் குழு விசாரணை தொடங்கியது.