சிறப்பு பொது வினியோகம் மூலம் ரேசன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் சிறப்பு பொது வினியோக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் லென்டில் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கும் பொருள்கள் வழங்கப்படுகிறது. சிறப்பு பொது வினியோக திட்டத்தின் காலஅவகாசம் இம்மாதம் 29-ந் தேதியோடு நிறைவடைகிறது.
ஆனால் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய்க்கு ரேசன் அட்டைதாரர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் அந்த திட்டத்தை வரும் நிதியாண்டிலும் நீட்டிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் வெளிச்சந்தையில் உள்ள பொருள்களின் விலையை கட்டுப்படுத்த முடியும் என்றும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் கோரியுள்ளார்.
எனவே, சிறப்பு பொது வினியோக திட்டத்தை அடுத்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கடிதம் மூலம் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.அந்த கோரிக்கைகளை தமிழக அரசு கவனமாக பரிசீலித்தது. அதன்படி, துவரம் பருப்பு அல்லது கனடா மஞ்சள் லென்டில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை ரேசன் அட்டைதாரர்கள் மேலும் ஓராண்டுக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.