X Close
X
+91-9846067672

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்வு


பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதற்காக பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை 400 ஐ தாண்டி விட்டது. இதனால் தனியார் பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் செல்ல மக்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் 2 மடங்கு உயர்ந்து விட்டது.சென்னையில் இருந்து நெல்லைக்கு தற்போது ஆம்னி பஸ்களில் ரூ.1,700 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. பஸ்களுக்கு ரு.1,800 கட்டணம், மெர்சிடஸ் பென்ஸ் சொகுசு பஸ்களில் ரூ.2,300 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு ஆம்னி பஸ்களில் ரூ.1,700 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.வழக்கமான நாட்களில் நெல்லை, தூத்துக்குடிக்கு ரூ.850 முதல் 900 வரை டிக்கெட் கட்டணம் ஆகும். தற்போது பொங்கல் பண்டிகை சீசனையொட்டி டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் சீசனை யொட்டி ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் 2 மடங்கு உயர்ந்துள்ளதால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் டிக்கெட் கட்டணத்தால் அவதியடைந்துள்ளனர்.பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆம்னி பஸ்களில் தற்போது பயணம் செய்து வருகிறார்கள்.

ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.