ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது.தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.
விசாரணை விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் சில காரணங்களுக்காக அப்பல்லோ நிர்வாகம், ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து ஆணையத்தின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ந்தேதி இடைக்கால தடை விதித்தது.
இதன்காரணமாக தற்போது வரை ஆணையத்தில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவுக்கு பின்பே, ஆணையத்தின் விசாரணை மீண்டும் தொடங்கும். இதுபோன்ற சூழ்நிலையில் ஆணையத்தின் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.தொடர்ந்து, ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 4 மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே 6 முறை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.