X Close
X
+91-9846067672

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்கள் முன்பதிவு தொடக்கம்



உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜல்லிக்கட்டு போட்டியை காண திடலின் இருபுறமும் காலரிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதை மாடுபிடி வீரர்கள் கவுரவமாக கருதுகின்றனர். இதில் பங்கேற்பதற்கான உடல் தகுதி தேர்வு இன்று நடந்தது.
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த இதில் பங்கேற்க மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அதிகாலை முதலே திரண்டு வந்திருந்தனர்.

காலை 8 மணிக்கு உடல் தகுதி தேர்வு திறன் தொடங்கியது. அரசு டாக்டர் வளர்மதி தலைமையில் 16 டாக்டர்கள், 60 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடல் தகுதி சோதனை நடத்தினர்.ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு 21 வயது முதல் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதில் பங்கேற்றவர்களின் வயது, ஆதார், முகவரி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து உயரம், எடை, ரத்த அழுத்தம் ஆகியவை சோதிக்கப்பட்டன.

மேற்கண்டவை சரியாக இருக்கும்பட்சத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக பெயர் பதிவு செய்யப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல்வேறு காரணங்களால் பலர் தேர்வு செய்யப்படவில்லை. கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 16-ந்தேதி நடக்கிறது. இதற்காக மாடுபிடி வீரர்களின் பெயர் பதிவு முகாம் நாளை (11-ந்தேதி) அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற உள்ளது.

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதேபோல் 15-ந்தேதி பொங்கல் அன்று சோழவந்தான் ஜனகை நாராயண பெருமாள் கோவிலில் கிராம பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு, பொங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டினர் தங்களது பெயர் மற்றும் பாஸ்போர்ட்டு சான்றிதழ்களுடன் மேலவெளிவீதியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.